

“தமிழகம் முழுவதும் நடைபெற்ற 36 மணிநேர ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ என்ற பெயரிலான சோதனைநடவடிக்கையில், 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 934 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது: தென்மாவட்டங்களில் சாதிய படுகொலைகள், முன்விரோத கொலைகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. 2012, 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக, திருநெல்வேலியிலும், திண்டுக்கல்லிலும் நடைபெற்ற பழிதீர்க்கும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 36 மணிநேர `ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ என்றபெயரில் நடந்த சோதனையின்போது 16,370 பேரை பிடித்து விசாரித்து, 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 733 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 934 கத்திகள், அரிவாள்கள் மற்றும்8 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,927 ரவுடிகளிடம் இருந்துநன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளைக் கைது செய்யதனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
முன்விரோத கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொலை வழக்குகள் மீது நீதிமன்ற விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தண்டனையை உறுதி செய்யவும் தனிப்படை அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கூலிப்படைகள் ஒடுக்கப்படும் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, தென்மண்டல ஐஜிஅன்பு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், திருநெல்வேலி சரகடிஐஜி பிரவீன்குமார் அபினபு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மணிவண்ணன் (திருநெல்வேலி), ஜெயக்குமார் (தூத்துக்குடி), கிருஷ்ணராஜ் (தென்காசி), பத்ரி நாராயணன் (கன்னியாகுமரி), திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார், மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் கே.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.