

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நேற்று நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் இரு பிரிவாக இருக்கைகளால் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.
தேவகோட்டை கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டுக்கான தேர்தல்நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்எல்ஏக்கள் மாங்குடி, கருமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைகூட்டத்தை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அதை ஒரு தரப்பினர் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் பேசுகையில், ‘மாங்குடி எம்எல்ஏ தேவகோட்டை காங்கிரஸ் நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். விளம்பரங்களில் மூத்த நிர்வாகி கே.ஆர்.ராமசாமியின் படத்தை புறக்கணிக்கின்றனர்.' என்றனர்.
மாங்குடி எம்எல்ஏ பேசுகையில், ‘தேவகோட்டையில் கோஷ்டி அரசியல்தான் செய்து வருகின்றனர்’ என்றார்.
இதனால் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்களுக்கும், மாங்குடி எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு தரப்பும் இருக்கைகளால் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகளை தூக்கி வீசினார்கள்.
இதில் கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர் வயக்கோட்டை பாலமுருகன் (33), மாங்குடி ஆதரவாளர் தேவகோட்டை வினோத்குமார் (30) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்தடிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீஸார் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தினர்.
பாதியில் வெளியேறிய எம்.பி.
இதனால் கோபமடைந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அவசரமாக வெளியேறினார். மோதலில் காயமடைந்த இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.