Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக மீட்டு பறவைகள் சரணாலயமாக மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமிப்புகளில் இருந்து முழுமையாக மீட்டு பறவைகள் சரணாலயமாகவும், அரிய தாவரம், விலங்கினங்களின் சுற்றுச்சூழலியல் வாழ்விடமாகவும் மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள 66.70 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களின் மூலம் ரூ.66 கோடிக்கு விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குவிசாரணையின்போது சட்டவிரோதமாக தனியார் பலர் 1990 முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலமாக பட்டாமாற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில், ‘‘சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது அரிய தாவர மற்றும் பறவைகள், விலங்கினங்களின் புகலிடமாக விளங்கும் பள்ளிக்கரணை உள்ளிட்ட எந்தவொரு சதுப்பு நிலத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து விலைக்கு வாங்க முடியாது. 1965-ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கிவிட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அருகே மாநகராட்சியின் 2 குப்பை கிடங்குகள் உள்ளன.1,085 குடியிருப்புவாசிகள் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். பறக்கும் ரயில் நிலைய தேவைக்காக மட்டுமே 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.25 ஏக்கர்நிலம் தேசிய கடல்சார் கல்விநிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபோல மத்திய காற்றாலைகள் நிறுவனம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள், பொறியியல் கல்லூரி என போட்டி, போட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அங்கு பதிக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களால் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அரிய வகை பறவை இனங்கள் தற்போது இல்லை. எனவே சதுப்புநிலப்பகுதியில் நிலவும் சுற்றுச்சூழலியலை காக்கும் விதமாக அதை பறவைகள் சரணாலயமாகவும், அரிய தாவர, விலங்கினங்களின் சூழலியல் வாழ்விடமாகவும் மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுப்பு நிலப்பகுதி முழுவதும் வேலி அமைக்க வேண்டும். அங்குள்ள குப்பை கொட்டும் தளத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அரசு மற்றும் தனியார் என யார்சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். சதுப்பு நிலப்பகுதிகளை பட்டா மாற்றம் செய்யக்கூடாது என பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x