பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு: குறைபாடு இருந்தால் உரிமம் ரத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடந்த ஒரு வாரமாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்டிஓ) மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாகன டயர்கள், அவசரகால கதவு, ஜன்னல், படிகள், தீயணைப்புகருவிகள், முதலுதவி பெட்டி, ஹேண்ட் பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநரின் பார்வைத் திறன் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

இதுபற்றி கேட்டபோது, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வாகனங்களில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமானதால், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அந்தந்த எல்லைக்கு உட்பட்ட ஆர்டிஓ.கள் சார்பில் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடந்து வருகிறது.

ஆய்வின்போது, வாகனங்களில் குறைபாடு ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை சரிசெய்த பிறகே, அந்த வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எஃப்.சி) வழங்கப்படும். பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், வாகன உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in