

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளைநேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டு மற்றும் மக்களை தேடி மருத்துவ மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய முதல்வர், அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தை தர மறுப்பது தான் வேதனையளிக்கிறது.
தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் வந்த போது, இதே மருத்துவமனையில் 2019 அக்டோபர் 28-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களிடம், அடுத்து அமையும் நம் ஆட்சியில் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்து விட்டு சென்றார். ஆனால், நம் கோரிக்கை இன்னும் முதல்வரின் கவனத்துக்கு செல்லவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.
எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.