

மதுரையின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெளியேற போதுமான வடிகால்கள் இல்லாததால் அரை மணி நேர மழைக்கே நகரின் சாலைகள் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு ஆறு போல் மாறிவிடுகின்றன.
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதியில் தொடங்கும். ஆனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தற்போதுதான் மழைநீர் கால்வாய்களை தூர்வாரத் தொடங்கி இருக்கிறது. அதற்குள் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தெப்பம்போல் தண்ணீர் தேங்குகிறது. குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், கே.கே.நகர், ஒத்தக்கடை மற்றும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் மழைநீர் ஆறு போல் சாலையில் ஓடுகிறது. இதில் வாகனங்கள் சிக்கி பழுதடைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது பெரும்பாலான சாலைகளில் கான்கிரீட்டாலான சென்டர் மீடியன்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் மழைநீர் வழிந்தோடுவது தடைபடுகிறது. வைகை ஆற்றின் இருகரைகளிலும் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி உள்ள இடங்களில் மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்யாததால் தண்ணீர் தேங்குகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடியை வைகை ஆற்றிலும், பெரியார் பேருந்து நிலையத்துக்கும் ஒதுக்கிவிட்டனர். மழைநீர் வடிகால்கள் அமைக்க எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.