

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு உபயமாக வரப்பெற்ற பசுக்களை, ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோயில்களின் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். உபயமாக வரப்பெற்ற பசுக்களை, பூசாரிகள், அர்ச்சகர்கள் 18 பேருக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். பின்னர், பிரகதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் செய்வது குறித்து அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்து சமய அறநிலையத் துறையின் மதிப்பு உயர்ந்துள்ளது. கோயில் திருப்பணிக்கு ரூ.100 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் இறைபணி செய்வதில் எங்களுக்கு இணையானவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ எம்.முத்துராஜா, கோட்டாட்சியர் அபிநயா, இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.