

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தியாவிலே முதல் முறையாக அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவியை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
கரோனா போன்ற தொற்றுநோய் பேரிடர் காலத்தில் நோயாளிகளை மருத்துவக்குழுவினர் அடிக்கடி அருகே சென்று கண்காணிக்க இயலாது. அதனால், கடந்த இரண்டு கரோனா தொற்று காலத்திலும் மருத்துவக்குழுவினர் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். அதில், அவர்களில் பலர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
சிலர் இறக்கவும் செய்தனர். இதுபோன்று தொற்று நோய்களுக்கு உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கவும், தொற்று நோயாளிகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் சிகிச்சை வழங்கவும் இந்தியாவில் முதல் முறையாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் கரோனா நோயாளிகளின் உடல்நிலை கண்டறியும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவி தொடக்க விழா நேற்று நடந்தது. நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலந்து கொண்டு இந்த கருவியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். டீன் ரெத்தினவேலு தலைமை வகித்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘‘ஐசியூ போன்ற அவசர சிகிச்சை வார்டுகளில் 15 கரோனா நோயாளிகளை இந்த கருவிகளை கொண்டு ஒருவரே கண்காணிக்கலாம். இந்த கருவிகள் பேட்ஜ் மாதிரி இருக்கும். நோயாளியின் நெஞ்சுபகுதியில் ஓட்ட வேண்டும். ப்ளூடூத் டிவெஸ் வைத்து இன்டர்நெட் மூலம் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை வழங்கலாம், ’’ என்றார்.
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘கரோனா போன்ற பேரிடர் காலத்தில் அதிகமான நோயாளிகளை குறைவான பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது சிரமம். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தொற்று நோய் காலத்தில் அவசியமானது, ’’ என்றார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு லைப் சயின் நிறுவனம் சார்பில் இந்த வயர்லெஸ் பயோ சென்சார் கருவிகளை ஆயிரம் எண்ணிக்கையில் வழங்கியிருக்கிறது.
லைப் சயின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரி சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘வயர்லெஸ் பயோ சென்சார் கருவியை கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஐசியூ.வில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும். இந்த வயர்லெஸ் கருவியின் மூலம் நோயாளியின் சுவாசம், இதய துடிப்பு, ஆக்ஸிசன் அளவு, வெப்ப நிலை உள்ளிட்ட 6 விதமான உடல்நிலை பயன்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
மருத்துவமனையில் உள்ள நர்ஸிங் ஸ்டேடனில் வைத்து கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து நோயாளிக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்த கருவி நோயாளியின் உடலில் பொருத்துவதால் எந்தவொரு பிரச்சினை ஏற்படாது.
இதனால் ஒரு செவிலியர் 50 நோயாளிகளை கையால முடியும், ’’ என்றார். மேலும், இந்த கருவிகளை கொண்டு கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் திட்டம், இந்தியாவிலே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வேலூர் NARUVI மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஜிவி.சம்பத் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.