

சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் பெண்கள் மிதிவண்டிப் பயணம் மற்றும் மாநகராட்சிப் பூங்காக்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல் போன்றவை பொதுமக்களின் ஆரோக்கிய நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் நலமிகு சென்னை என்ற அடிப்படையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பல்வேறு சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 75-வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநகரில் ஒருவார காலத்திற்கு சைக்கிள் பயணம், பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மிகு நகரம் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவர்கள் இணைந்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (25.09.2021) இரவு 10 மணியளவில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து பெண்கள் மிதிவண்டிப் பயணம் தொடங்கப்பட்டு, டி.ஜி.பி. அலுவலகத்தில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 26.09.2021 அன்று வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை, மெரினா காந்தி சிலை, அண்ணா நகர் 6-வது அவென்யூ, ஐ.சி.எஃப் நியூ ஆவடி சாலை, பெசன்ட் நகர் ராஜாஜி பவன், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, அடையாறு புற்றுநோய் நிறுவனம், அண்ணா சாலை ஏ.ஜி. டி.எம்.எஸ். மெட்ரோ, ரிப்பன் கட்டிடத்தின் சிக்னல் அருகில் மற்றும் ஆர்.கே.சாலை டி.ஜி.பி. அலுவலகம் ஆகிய 10 இடங்களில் மிதிவண்டிப் பயணம் காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.
கோவிட் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தீவிர தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் மிதிவண்டிப் பயணத்தில் பங்கு பெறுபவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் பயணம் மேற்கொள்வார்கள்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், 26.09.2021 முதல் 03.10.2021 வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 29 முக்கியப் பூங்காக்களில் சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் ஜூம்பா போன்ற விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த 29 பூங்காக்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/pdf/Parks_list.pdf என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களின் பயிற்சி வீடியோக்களை 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் 26.09.2021 முதல் 01.09.2021 வரை அனுமதி அளிக்கப்படும். மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாணவ, மாணவியர்கள் தெரிந்துகொள்ள 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிகழ்வில் 30 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும், இதுகுறித்த விவரங்களை மேற்குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் பெண்கள் மிதிவண்டி ஓட்டம் மற்றும் பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.