Published : 25 Sep 2021 06:30 PM
Last Updated : 25 Sep 2021 06:30 PM

தனியார் நிறுவனக் கடன் நெருக்கடி; மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை: பொதுமக்கள் மறியல்

காஞ்சிபுரம் அருகே கடன் கொடுத்த தனியார் நிறுவனம் கொடுத்த நெருக்கடி காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மனோகரன், மாற்றுத்திறனாளி. அவர் டிராக்டர் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். கடன் தவணையை அவரால் முறையாகச் செலுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த மனோகரன் நசரத் பேட்டையில் உள்ள அந்த தனியார் நிதி நிறுவனத்தின் வாசலில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தனியார் நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மனோகரனுக்கு நீதி வேண்டியும் காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x