Published : 25 Sep 2021 01:33 PM
Last Updated : 25 Sep 2021 01:33 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 3 பேர் காயம்; வேலைநிறுத்தம்

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று மதியம் (செப். 24) சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவரது அண்ணன் சிவா, அவரது தந்தை சின்னத்தம்பி ஆகிய மூன்று பேர் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஆறுகாட்டு துறை கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 3 ஃபைபர் படகில் வந்த 10 இலங்கை கடற் கொள்ளையர்கள் சின்னத்தம்பி படகை வழிமறித்து இவர்களது படகில் கத்தியுடன் ஏறி ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அப்போது கொடுக்க மறுத்த ஆடுதுறை மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சிவகுமாரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியால் தலையில் மூன்று இடங்களில் வெட்டியுள்ளனர். இதில், சிவகுமார் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் படகிலேயே சரிந்து விழுந்தார்.

மேலும், படகிலிருந்த சிவா மற்றும் சின்னத்தம்பிக்கு ஆகியோரை இரும்பு பைப்பால் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். மேலும், படகில் இருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதனையடுத்து, இன்று (செப். 25) அதிகாலை கரை திரும்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்களை சக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிவகுமாருக்கு தலையில் 3 இடங்களில் ஏற்பட்ட வெட்டுக் காயத்தில் 15 தையல்கள் போட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அறிவுறுத்தினார். மேலும், மீனவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இந்திய எல்லைக்குள் தொடர்ந்து அத்துமீறல் நடப்பதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீதும் நாகை மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்திவரும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடல் கொள்ளையர்களைக் கண்டித்து, ஆற்காடு துறையில் 50 விசைப்படகு 200 ஃபைபர் படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்திய கடற்பரப்பில் அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x