

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய நேரில் ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நவம்பர் 4-ம் தேதிதீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. விபத்தில்லா தீபாவளியை உறுதிசெய்ய தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டாசுகளில் சரியான முறையில் ரசாயனம் பயன்படுத்துவது குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரில்சென்று ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதல்வரின் உத்தரவுப்படி, தொழிலாளர் நலத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு உரிமம் உள்ளதா என்பதை ஆய்வுசெய்து, உரிமம் இல்லாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக அக்.15-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.