Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

வனச்சரகர் கைதை கண்டித்து வன ஊழியர்கள் 2-ம் நாளாக போராட்டம்: வால்பாறையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு

வால்பாறை வனச்சரகர் மீதானவழக்கை ரத்து செய்யாவிட்டால்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வன அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்தில், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், சுற்றுலாப் பயணிகள் மூவர் தங்கியிருந்தனர். கடந்த 21-ம் தேதி இரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன்(35), மதுபோதையில் சுற்றுலாபயணிகளை தகாத வார்த்தையில் திட்டியதாக, வால்பாறை குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த வால்பாறை போலீஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்து, குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் மூவரும் விடுதிக்கு வெளியே இருந்துள்ளனர். வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் உள்ளே செல்லுமாறு வனச்சரகர் அறிவுறுத்தியுள்ளார். இதை ஏற்காமல் தகராறு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றனர்.

சம்பவத்தைக் கண்டித்து வனத்துறையினர் நேற்று 2-ம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில், வன அலுவலர் சங்க மாநிலத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் அவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சிவப்பிரகாசம் பேசும்போது, “வனச்சரக அலுவலர் மீது பொய் வழக்குபோட்டு சிறையில் அடைத்திருப்பதை வன அலுவலர் சங்கம் கண்டிக்கிறது.

வனத் துறையில் உள்ளவர்கள் வனத்தை பாதுகாக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள். தங்கும் விடுதிக்கு வருபவர்களை வரவேற்று உபசரிப்பது அவர்களது பணி கிடையாது. வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் வனத்துறையை தொடர்பு கொண்டு, வாய்மொழியாக சில கோரிக்கைகளை வைத்துஉள்ளார். அதனை ஏற்று வனத்துறையினர் விடுதியை பதிவு செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கினர்.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி, வனத்துறையில் உள்ள தங்கும் விடுதிகள், வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளும் விடுதி மட்டுமே ஆகும். மற்றவர்கள் வந்து தங்கும் விடுதி கிடையாது. வனச்சரகர் கைது விவகாரத்தில், சம்பவ இடத்துக்கே செல்லாத நீதிமன்ற தலைமை எழுத்தர் தந்த புகாரை ஏற்று, எப்படி போலீஸார் வழக்கு பதிவு செய்யமுடியும்?

இரவு 8 மணிக்கு மேல் ஒருவர் அவரது வீட்டில் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம். வீட்டில் இருந்த வனச்சரகரை அழைத்து வந்து ரத்த பரிசோதனை செய்துள்ளனர். வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அவரை அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x