

“தமிழகத்தில் நிர்வாக திறமையற்ற அரசு நடக்கிறது” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அதிமுக அரசு உருவாக்கியது. சட்டப்பேரவைத் தேர்தலில் நகர்ப்புற பகுதியில்தான் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தன. கிராமப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் கிராமப்புறங்களை உள்ளடக்கியவை. எனவே, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. 6 மாவட்டங்களை பிரித்துக் கொடுத்து, நிர்வாக வசதி எளிமையாக்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
திமுக 505 அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்தது. அது போதாதென்று மேலும் 20 அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால், இதுவரை இரண்டு, 3 அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை முறையாக தள்ளுபடி செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி வருகின்றனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள், அதையும் செய்யவில்லை. நிர்வாகதிறமை இல்லாத அரசாங்கம் இப்போது நடக்கிறது என்றார்.
கூட்டத்துக்கு, தென்காசி வடக்குமாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டனர்.