பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் கொலை வழக்கில் 5 பேர் சரண்

நிர்மலா
நிர்மலா
Updated on
1 min read

பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண், திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 5 பேர் நேற்று சரணடைந்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் கடந்த 2012-ல் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஏற்கெனவே 4 பேர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா(69) என்பவர், இரு தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி நீதிமன்றத்தில் சரண்

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேஉள்ள சீவல் சரகு பகுதியைச் சேர்ந்த அழகுமலை மகன் அலெக்ஸ்பாண்டி(18), கணேசன் மகன் சங்கிலி கருப்பன்(28), கணேஷ் மகன் தமிழ்ச்செல்வன் (22), வேடசந்தூரைச் சேர்ந்த காந்திமகன் ரமேஷ்குமார் (33), அம்புலிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சரவணன் மகன் முத்துமணி(23) ஆகியோர் நேற்று திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வழக்கறிஞர் பொன்.முருகேசன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். சரணடைந்த 5 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in