

கடலூர் மாவட்டத்தில் 2003-ல் முருகேசன்(25), கண்ணகி(22) ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராசா, தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
குற்றம்சாட்டப்பட்டவர்கள், முருகேசனின் உறவினர் அய்யாசாமியை கயிற்றில் கட்டி, தலைகீழாக கிணற்றில் தொங்கவிட்டு, கொடூரச் செயலுக்கு உடந்தையாக செயல்படுத்தியுள்ளனர்.
சாதிய கவுரவத்துக்காக மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இக்கொலை நிகழ்த்தப்பட்டு உள்ளது. தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொலை செய்யப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
முதல் கவுரவக் கொலை
தமிழகத்தில் 2003-ம் ஆண்டு நடந்த முருகேசன் - கண்ணகி கொலையே முதல் கவுரவக் கொலையாக கருதப்படுகிறது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்தே இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
2015-ல் நடந்த உடுமலை சங்கர் கவுரவக் கொலை வழக்கின் தீர்ப்பு 2020-ம் ஆண்டு வெளியானது. ஆனால் 18 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முருகேசன்-கண்ணகி கவுரவக் கொலையின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தாமதம் ஏன்?
முதலில் வழக்குக்கு சம்பந்தமில்லாத நபர்களை இணைத்தது, அதன் பின் உண்மையான குற்றவாளிகளை சிபிஐ கண்டுபிடித்தது.
இதன் சாட்சிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும், 81 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியதும், தீர்ப்புக்கான காலதமாதமாக கருதப்படுகிறது.
தீண்டாமையின் உச்சம்
இந்தவழக்கை புலனாய்வு மேற்கொண்ட சிபிஐ துணைத் தலைவர் ஏ.கே.விஸ்வநாதனிடம்தீர்ப்புக் குறித்து கேட்டபோது, “வரவற்கக் கூடிய தீர்ப்பு” என்றார்.
வழக்கை கையாண்ட ஆய்வாளர் நந்தகுமார் நாயரிடம் இதுகுறித்து கேட்டபோது, “தீண்டாமையின் உச்சமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நல்லத் தீர்ப்பு. வரவேற்கதக்கது.
இவ்வழக்கில் ஏடிஜிபி விஸ்வநாதனின் வழிகாட்டுதல் எங்களுக்கு பேருதவியாக இருந்தது” என்று தெரிவித்தார்.