Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் தற்போது `நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

முழுமையாக தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் பணி வழங்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், அவர்களது பணிகளின் அடிப்படையில் வழங்கப்படும். பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்படும்.

பதிவு சய்வது எப்படி?

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, உரிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டு திட்டம் தயாரித்து,இயற்கை வள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு மற்றும் இதர பணிகள் என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும்.இதைக் கண்காணிக்க மாநிலஅளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x