

லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடர் சோதனையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டிலிருந்து மேலும் 4.5 கிலோ தங்கம், சந்தனக் கட்டைகளால் ஆன கலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தொழில் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று கட்டாயம். இதனால் தொழில் அதிபர்கள் உட்பட பல நிறுவனத்தினர் தடையில்லா சான்று பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாடுமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் (ஓய்வு) மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் (லஞ்ச ஒழிப்பு துறை) வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வெங்கடாசலத்தின் வீடுஉட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனைமேற்கொண்டனர். முதல் கட்டமாக ரூ.13.5 லட்சம், ரூ.2.5 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மரத்தால் ஆன கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் சோதனையில் மேலும்4.5 கிலோ தங்கம், 5.25 கிலோ சந்தன மரப் பொருட்கள், 4 கிலோவெள்ளிப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. வெங்கடாசலத்தின் வீட்டிலிருந்து இதுவரை 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மர கலைப்பொருட்கள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறையினர் கூறினர்.