Last Updated : 25 Sep, 2021 03:32 AM

 

Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்: சிக்னலில் நிற்காமல் சென்றதாக நடப்பாண்டு 92,926 வழக்குகள் பதிவு

மாநகரில் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களால் விபத்துகள் அதிகரிப்பதை தடுக்க, அங்கு கண்காணிப்புப் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 51 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்துக் காவல்துறையினர், முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும், சிக்னல்களில் உள்ள கேமராக்கள் மூலமும் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

காவல்துறையின் புள்ளி விவரப்படி, மாநகரில் கடந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 39 சாலை விபத்துகளில், 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 57 சாலை விபத்துகள் ஏற்பட்டு, 59 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 383 உயிரிழப்பு அல்லாத சாலை விபத்துகளும், நடப்பாண்டு இதே காலக்கட்டத்தில், 455 உயிரிழப்பு அல்லாத சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகன ஓட்டுநர்கள் நிற்காமல் செல்வதும் விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகம் நடக்கின்றன. சிக்னலில் காவலர் இல்லை என்ற தைரியத்தில் பலரும் விதிகளை மீறுகின்றனர். ஆனால் கேமராவில் பதிவாவதை பலரும் அறிவதில்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.ஆர்.செந்தில் குமார் கூறும்போது, ‘‘சிக்னல் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஏ.என்பி.ஆர் எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம், விதி மீறி செல்லும் வாகன ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. தவிர, நேரடித் தணிக்கையும் நடக்கிறது. சிவப்பு விளக்கு எரியும் போது, நிற்காமல் சென்றதாக கடந்தாண்டு 90,145 வழக்குகள், நடப்பாண்டு இதுவரை 92,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டு செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 3,359 வழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 456 வழக்குகள், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை தாண்டி வாகனம் ஓட்டியதாக 7,726 வழக்குகள், நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தியதாக 90,609 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 55,048 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 20,078 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்புடையவர்களுக்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதுபோன்ற விதிமீறல்களில் அதிகளவில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதால், அவர் களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகரில் சாலை விபத்துகளைத் தடுக்க, விதிகளை மீறுபவர்கள் மீது தினமும் சராசரியாக 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x