ரூ.1.40 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யக்கோரி: சென்னையில் ரிசர்வ் வங்கி முன்பு விவசாய சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரூ.1.40 லட்சம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாளை (மார்ச் 22) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர் எம்.அர்ச்சுனன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
டிராக்டர் கடன் தவணையைக் கட்டவில்லை என்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் விவசாயி பாலனை போலீஸார் கொடூரமாகத் தாக்கினர். அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று வாங்கிய டிராக்டரை, சாலையின் நடுவே வைத்து பறிமுதல் செய்த அவமானத்தால் விவசாயி அழகர் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளின் கடனுக்காக ஜப்தி, டிராக்டர் பறிமுதல், அடகு நகைகளை ஏலம் விடுதல், கடன் வாங்கிய வங்கிகள் முன்பு பிளக்ஸ் பேனர் வைத்து கேவலப்படுத்துவது போன்ற விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் வங்கிகள் இதுபோன்ற செயல்களை செய்கின்றன.
தமிழகத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி விவசாயக் கடன் நிலுவையில் உள்ளது. கடனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களைத் தடுக்க ஆந்திரத்தில் ரூ.72 ஆயிரம் கோடி, தெலங்கானாவில் ரூ.17,600 கோடி விவசாயக் கடன்களை வங்கிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே செலுத்தின. தமிழகத்திலும் விவசாயக் கடன் முழுவதையும் அரசே செலுத்த வேண்டும்.
கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுவதையும், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதையும் கைவிட வேண்டும். தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை விவசாயிகளின் கடன் வசூல் நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயி அழகர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிசர்வ் வங்கி முன்பு நாளை (மார்ச் 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
