Published : 25 Sep 2021 03:33 AM
Last Updated : 25 Sep 2021 03:33 AM

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் அப்போலோவில் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்து தங்கப் பதக்கம் பெற்றார்

அறுவைசிகிச்சைக்குப் பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மாணவருடன் அப்போலோ மருத்துவக் குழுவினர்.

சென்னை

நாட்டிலேயே அதிகமான ரோபோ பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டது மற்றும் அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்வது ஆகிய இரு பெரும் விழா அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது.

அப்போது, அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையத்தின் பெருங்குடல் ரோபோ அறுவை சிகிச்சை நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறும்போது, “டாக்டர் ஜேடி என்ற 28 வயது மாணவர் லோ ரெக்டல் கென்சர் என்ற பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 2017-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்திருந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ரோபோ உதவியுடன் சிக்கலான பெருங்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் தனது படிப்பை தொடர்ந்தார். அதில் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றார்” என்றார்

அப்போலோ மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறும்போது, “புற்றுநோய்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அப்போலோவில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களைக் கொண்ட பெருங்குடல் அறுவை சிகிச்சை துறை 2016-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. மேலும் ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச பக்க விளைவுகளை ஏற்படுத்தும் துல்லியமான அறுவை சிகிச்சையை வழங்க முடியும்” என்றார்.

துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறும்போது, “நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற எங்கள் கொள்கையின்படி, லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அமெரிக்காவின் புளோரிடாவில் செயல்பட்டு வரும் கிளிவ்லேண்ட் மருத்துவ மையம் ஆகியவற்றுடன் அப்போலோ நிர்வாகம் மருத்துவ கூட்டு செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x