பெண் போலீஸாருக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் நேற்று பெண் போலீஸாருக்கான பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால். உடன், கூடுதல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் படம்: க.பரத்
சென்னையில் நேற்று பெண் போலீஸாருக்கான பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால். உடன், கூடுதல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் படம்: க.பரத்
Updated on
1 min read

சென்னையில் பெண் போலீஸாருக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.

பெண் போலீஸாருக்கு காவல் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்பட செயல்படத் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பெண் காவலர்களுக்கான ‘சமநிலை வாழ்வு முறை’ என்ற 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.

இந்த முகாமைத் தொடங்கிவைத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, "பெண் போலீஸார் காவல் பணி, சொந்த வாழ்வில் திறம்பட செயல்பட்டு, இரண்டிலும் சம வெற்றி பெறுவதற்காக 3 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், முதல்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான பெண் போலீஸார் அனைவரும் பங்கேற்பர். ஒரு பயிற்சி வகுப்பில் 76 பெண் போலீஸார் என, 64 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்" என்றார்.

மேலும், பெண் போலீஸாருக்கு கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்று நோய் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in