

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை, தாம்பரம் ரயில் நிலைய குடியிருப்பு பகுதி அருகே நேற்று முன்தினம் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்வேதா, திருக்குவளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்த இளைஞர் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்வேதா உயிரிழந்து விட்டதைத் தொடர்ந்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அவர் சடலத்தை வாங்க ஏராளமான உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரனை பாதுகாப்பு கருதி வேறு வளாகத்துக்கு மாற்றினர். மருத்துவர்கள் பரிசோதனையில் ராமச்சந்திரன் உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.