Published : 25 Sep 2021 03:33 AM
Last Updated : 25 Sep 2021 03:33 AM

சென்னையில் பருவமழையின்போது ஏரிகளின் கொள்ளளவை தாண்டி நீரை சேமிக்காதீர்கள்: தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பருவமழையின் போதுகொள்ளவை தாண்டி அதிக நீரை சேமிக்கக்கூடாது என்று தலைமைச் செயலர் வெ. இறையன்புஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் ஆகியவற்றில் இருந்து நீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் தற்போது பூண்டியில் 2.521 டிஎம்சி, புழல் - 3.068, சோழவரம் - 0.646, செம்பரம்பாக்கம் - 2.879, தேர்வாயக்கண்டிகை - 0.461 என 9.575 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இ்ந்நிலையில் முதல்வர் உத்தரவின் பேரில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் புழல், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை நேரில்ஆய்வு செய்தனர். மேலும், நீர்நிலைகளில் உள்ள கதவணைகள், கரைகளை பார்வையிட்டு, பருவமழைக்கு முன் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள், வெள்ளத்தடுப்பு தளவாடங்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நீர் நிலைகளில் கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

பூண்டி நீர்த்தேக்க கதவணையில் ஏற்பட்ட கசிவை தடுக்கபுதிதாக ரப்பர் சீல் மாற்றும்படி அறிவுறுத்தினார். செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தபோது, ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில்தொழிற்சாலை கழிவு கலப்பதாகவந்த புகாரின் அடிப்படையில் பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டுக்குழு களத் தணிக்கைசெய்து, நீர்மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. அதன் அறிக்கையை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து அதிகாரிகளுடன் பேசிய தலைமைச் செயலர் வெ.இறையன்பு,‘‘ பருவமழைக்கு முன்னதாகவே கடந்தாண்டை விடஇந்தாண்டு கூடுதலாக தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், அடுத்தமாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கூடுதல் நீர்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது நீர்நிலைகளில் குறிப்பிட்டகொள்ளளவை தாண்டிஅதிகமான நீரை சேமிக்கக்கூடாது. நீர்வரத்துக்கு ஏற்றவாறு உபரிநீரை படிப்படியாக வெளியேற்ற 24 மணிநேரமும் முழுக்கவனத்துடனும் விழிப்புடனும் தயாராக இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் ஆட்சியர் எம்.ஆர்த்தி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் இ.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x