

பழநி அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பயணிகள் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பழநியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை கோவைக்குப் புறப்பட்டது. பழநியை அடுத்துள்ள தாழையூத்து அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு (30), முருகன் (35), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த விக்கிரபாண்டி(24) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்லப்பாண்டி, லாரி ஓட்டுநர் ராஜேஷ், பயணிகள் தர்மன், சுதாகர், ஸ்டீபன் உள்ளிட்ட 20 பேர் காய மடைந்தனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த சாமிநாதபுரம் போலீஸார் காயமடைந்தோரை மீட்டு பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் எஸ்.பி., சீனிவாசன் விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். லாரி ஓட்டுநர் ராஜேஷ் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்தது.