

வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘டீல் இம்தியாஸ்’ உட்பட 7 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம்அக்ரம் (42). மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளராகவும், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அங்குள்ள மசூதியில் தொழுகை முடித்து விட்டு தனது 7 வயது மகனுடன் வீடு திரும்பியபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வசீம்அக்ரமை மகன் கண்முன்னே வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இந்த வழக்கில் 10-ம் தேதி இரவு காஞ்சிபுரம் அருகே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்களான ‘டீல்’ இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், கூலிப்படையைச் சேர்ந்த செல்வகுமார், அஜய், பிரவீன்குமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி சரணடைந்தனர்.
இதையடுத்து, நீதிமன்றங்களில் சரணடைந்த டீல் இம்தியாஸ் உட்பட 7 பேரும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி காளிமுத்துவேல் 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து டீல் இம்தியாஸ் சேலம் சிறையிலும் மற்ற 6 பேரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, வேலூர் மற்றும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடம் வசீம்அக்ரம் கொலை குறித்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வாணியம்பாடி நகர காவல் துறையினர், குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனால், சேலம் சிறையில் இருந்து டீல் இம்தியாஸூம், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து செல்வகுமார், அகஸ்டின், அஜய், முனீஸ்வரன், சத்தியசீலன், பிரவீன்குமார் ஆகிய 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்டு நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, வசீம்அக்ரம் கொலை வழக்கில் டீல் இம்தியாஸ் உட்பட 7 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த 3 நாட்கள் கஸ்டடி வழங்கி நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவிட்டார். விசாரணை முடிந்து வரும் 27-ம் தேதி 7 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், போலீஸார் விசாரணையின் போது 7 பேருக்கும் 24 மணி நேரத்துக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் 7 பேரையும் துன்புறத்தவோ, அடிக்கவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி காளிமுத்துவேல் வழங்கினார்.
இதைதொடர்ந்து, 7 பேரும் பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டனர்.