Published : 24 Sep 2021 08:35 PM
Last Updated : 24 Sep 2021 08:35 PM

பதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுரை

பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக முன்னாள் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சையைக் கிளப்ப தற்போது அடுத்தடுத்து அந்த சர்ச்சை நீண்டு கொண்டிருக்கிறது. ட்விட்டரில் இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டி.ஜெயக்குமார் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நிதியமைச்சருக்கு நீண்ட அறிவுரை ஒன்றைக் கூறியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர் - சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதிவிக்கு அழகல்ல.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்பது போல, தம்பி முதன்முறை அமைச்சர் ஆனதால் தலைகால் புரியாமல் சித்தம் கலங்கி பேசுவது போல் பேசி வருவதால், சில வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.
தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்து கொண்டு ஜிஎஸ்டி-யின் வரலாறு தெரியாமல் இருப்பது தங்களுக்கு அழகல்ல.

ஜிஎஸ்டியை மத்திய அரசு கொண்டு வந்த போது தொலைநோக்கு பார்வையுடன் அதனை அணுகி பல்வேறு திருத்தங்களை வலியுறுத்திய இயக்கம் அஇ அதிமுக. நாடாளுமன்றத்தில் அந்த மசோதா வாக்கெடுப்பு வந்தபோது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வாக்களிக்க முடியாது என வெளிநடப்பு செய்ததும் இந்த பேரியக்கமே தம்பி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அழுத்தத்தால் தான், உற்பத்தியில் பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் இழப்புக்கு நஷ்ட ஈடு தர மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் அவர். அதனால் தான் இன்றளவுக்கு மற்ற மாநிலங்கள் இவ்விஷயத்தில் ஜெயலலிதாவை போற்றி மகிழ்கின்றன.

தம்பி உனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏன் என்றால் 2016-க்கு பின்பு தான் நீ அரசியலுக்கு வந்தாய். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உங்கள் கட்சி அங்கம் வகித்திருந்த போது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வைத்திருந்த வாட் வரிக்கான நிலுவை தொகை மட்டும் 4080 ஆயிரம் கோடி ரூபாய். நீங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைப்பேன் என்று கூறி, அந்த நிலுவைத் தொகையை பெற்றுத் தந்திருக்க முடியும். அவ்வளவு எம்.பிக்கள் உங்கள் வசம் இருந்தார்கள். ஆனால் பதவி சுகத்திற்கு ஆசைப்பட்டு தமிழக மக்களின் நலன்களை அடகு வைத்தீர்கள். அதன் நீட்சியாகத் தான் தம்பி இப்போதும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் என்று பாடியிருப்பார் எம்.ஜி.ஆர். இந்த பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? தம்பி பி.டி.ஆர் உனக்கு மிகவும் பொருந்தும்.

ஆம், பதவியில் இருக்கும் போது பணிவு இருக்க வேண்டியது மிகமிக அவசியம். உங்களுக்கு நாகரீகம் என்ற சொல்லுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு வந்து வீட்டீர்கள் என நினைக்கிறேன். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் சுயமோகி. நானும் படித்தவன் தான், இரண்டு பட்டங்கள் பெற்றவன் தான். இளங்கலை அறிவியலிலும் முதன்மையான மாணவன், சட்டப் படிப்பிலும் அப்படியே. அதற்காக ஒரு நாளும் கர்வம் கொண்டு அலைந்தவனல்ல.

தம்பி, கடந்த 4 மாதங்களாகத் தான் நீங்கள் அமைச்சர். படிப்பு வேறு, களநிலவர பொருளாதாரம் வேறு என்று இப்போது தான் உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பணக்காரர்களுக்கு வேலை செய்திருப்பீர்கள். ஆனால், நான் 1991-ல் இருந்தே அமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்தை பட்டறிவின் மூலமாக கற்றுக் கொண்டவன் தம்பி. ஜெயலலிதாவிடம் பாடம் பயின்றவன் நான்.

நீங்கள் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினால், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி நானும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.

தம்பி உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நான் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இல்லை. அன்றைய தினம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் என்ற முறையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தேன்.
ஆக மொத்தம் தம்பி, ட்விட்டர் உலகத்தில் இருந்தும் மற்றவர்களை வசைபாடுவதில் இருந்தும் விலகி மக்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பி.
இனியாவது நல்ல மாணவன் எப்படி தவறாமல் பள்ளி செல்வானோ அதுபோல கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ளவும்

இப்படிக்கு,

அரசியலிலும் உனக்கு அண்ணன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x