

பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லர் அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''வசந்தியிடம் இருந்து வழக்கு தொடர்பாக எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, ''காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்கை விசாரிக்க காவல்துறையினர் தயங்குகின்றனர். மனுதாரர் காவல் ஆய்வாளராக இருக்கிறார். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறது. நீதிமன்றம் தலையிட்ட பிறகே மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வரை அவருக்குச் சொந்தமான வீடுகளில் ஆய்வு நடத்தவில்லை. அவரின் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் உள்ள சொத்துகள் தொடர்பாகப் பதிவுத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளதா? மனுதாரர் மீதான புகாருக்கு முகாந்திரமாக இருக்கும் ஆவணங்கள், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.
பின்னர், விசாரணையை செப்.30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.