

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க 2 தனிப்படைகள் தொடங்கப்பட உள்ளன என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று (செப்.23) இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Stroming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதாகினர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப் படை துணை ஆணையர் அலுவலகத்தில், பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4 ஆயிரத்து 800 பெண்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த 3 நாள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
''தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க 2 தனிப்படைகள் தொடங்கப்பட உள்ளன. உதவி ஆணையர் தலைமையில் ரவுடிகளுக்கு எதிராக வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களில் புதிய பிரிவுகள் உருவாக்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்றில் இருந்து தொடர்ந்து 48 மணி நேரம் சோதனை நடைபெற உள்ளது.
இந்த சோதனையில் சென்னையில் 717 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் சிக்கினர். பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்த முற்றுகைச் செயல்பாடு நடைபெறும்.
கடந்த மூன்று மாதங்களில் எடுத்த கணக்கெடுப்பில் சென்னையில் குற்றச் சம்பவங்கள் முன்பைவிடக் குறைந்துள்ளன. குற்றங்கள் அதிகம் நடைபெறும் வண்ணாரப்பேட்டையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 30 ரவுடிகள் கண்டறியப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.