

கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்துவந்த தொழிலாளியைப் புலி தாக்கியது. படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை தேவன் எஸ்டேட்-1 பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (52). தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். இவர் இன்று (செப். 24) காலை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த புலி திடீரென அவரைத் தாக்கியது. இதில், கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வனத்துறையினர் உடனடியாகப் புலியைத் துரத்தி, சந்திரனை மீட்டு முதலுதவிக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, வழியிலேயே சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக, கூடலூர் சுற்றுப்புறப் பகுதிகளில் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், 4 வளர்ப்புக் கால்நடைகளை புலி அடித்துக் கொன்றுள்ளது. இதனைப் பிடிக்க வேண்டும் என, சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால், ஸ்ரீமதுரை பகுதியில் புலியைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
ஆனால், புலி தேவர்சோலை பகுதியில் உள்ள தேவன் எஸ்டேட்-1 பகுதிக்கு வந்து அங்கு சந்திரனைப் புலி தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து, புலி, மனிதரைக் கொல்லும் அபாயம் உள்ள நிலையில், இதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தேவர்சோலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, புலியைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளத்தனர்.
கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பாட்டவயலில் 2015-ல் ஒரு பெண், 2016-ல் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வுட் பாரியர் எஸ்டேட்டில் பணிபுரிந்த வடமாநிலக் காவலாளி ஆகியோர் புலி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தனர். பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய பின்னர் இரு புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதுமலை வனப் பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவர்சோலை அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறியதால், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. ஆனால், தேவன் எஸ்டேட் பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளியைப் புலி தாக்கிக் கொன்றது குறிப்பிடதக்கது.