

இருதய நோய் அறுவைச் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டது என, டி.ஆர். பாலு எம்.பிக்கு, பிரதமர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. அலுவலகம் இன்று (செப். 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலத்தைச் சேர்ந்த, ஜெசிமோள், இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உதவி அளிக்குமாறு, கடந்த ஜூலை மாதத்தில், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
டி.ஆர்.பாலுவின் பரிந்துரையையும் வேண்டுகோளையும் ஏற்று பிரதமர் மோடி ஜெசிமோளின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம், 8 செப்டம்பர் 2021, அன்று டி.ஆர்.பாலு எம்.பிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஜெசிமோளின் இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 50,000 சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவணங்கள் கிடைத்த பின்னர், மேற்கண்ட உதவித் தொகையானது உடனடியாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.