Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி விவாதிக்க நடவடிக்கை

சென்னை

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஆண்டுக்கு இருமுறை கூடி, ஏற்றுமதி நிலைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம்நடந்த ‘ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழுஅமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து, முதல்வர் நேற்று வெளியிட்ட ஏற்றுமதிக்கான கொள்கையில் கூறியிருப்பதாவது:

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு, சரக்கு கையாளுதல், விவசாயம், ஏற்றுமதி சேவை, மத்திய, மாநில அளவில் வர்த்தகம் தொடர்பான அனைத்துவிதமான சிக்கல்களையும் தீர்க்கும் வகை யில் செயல்படும்.

இந்தக் குழுவில், நிதித்துறை செயலர், தொழில்துறை செயலர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலர், வேளாண்துறை செயலர், கால்நடை பராமரிப்பு, பால் மற்றும்மீன்வளத் துறை செயலர், குறு,சிறு, நடுத்தர தொழில்கள் துறைசெயலர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசின்தொழில் வழிகாட்டி பிரிவு மேலாண்இயக்குநர் ஒருங்கிணைப்பாள ராகவும், அயல்நாட்டு வர்த்தக கூடுதல் இயக்குநர் ஜெனரல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். இதுதவிர ஏற்றுமதி கவுன்சில், சங்கம் ஆகியவற்றின் சார்பில்தலா ஒரு உறுப்பினர் என 6 பேர் இடம் பெறுவார்கள்.

குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை கூடி, ஏற்றுமதி நிலைப்பாடு தொடர்பானவற்றை ஆய்வு செய்யும். குழு கூட்டத்தில் வேறுஎந்த துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க அழைக்கும் அதிகாரம் குழுவின் தலைவரான தலைமைச் செயலருக்கு வழங்கப்பட்டுள் ளது.

இதுதவிர, தொழில்துறை செயலர் தலைமையில் செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, மத்திய அரசுடன் ஏற்றுமதி தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைப்புப் பணிகளைமேற்கொண்டு ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்யும். இந்த குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஏற்றுமதி மேலாண்மை குழுவுக்கு அறிக்கை அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x