Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறைவான இடங்கள் ஒதுக்கீடு: திமுக மீது காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளதால், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9-ம்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன.

கூட்டணி கட்சிகளிடம் பேசி வார்டுகளை ஒதுக்கும் பொறுப்பை திமுக மாவட்டச் செயலாளர்களிடம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒப்படைத்தார். இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் பேச்சுநடத்தினர். வார்டுகள் பங்கீடு குறித்தபேச்சுவார்த்தையின்போது, திமுக தரப்பில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், திமுக தலைமையால் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட கவுன்சிலர்கள், 74 ஊராட்சி ஒன்றியங்களில் 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அடிப்படையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாவட்டத்துக்கு 4 என 8மாவட்ட கவுன்சிலர் இடங்கள், ஒன்றியத்துக்கு 4 என 76 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களை காங்கிரஸ் கேட்டுள்ளது.

ஆனால், நெல்லையில் 1 மாவட்ட கவுன்சிலர், 11 ஒன்றிய கவுன்சிலர், தென்காசியில் 3 மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

மற்ற 7 மாவட்டங்களில் தலா 2 மாவட்ட கவுன்சிலர், ஒன்றியத்துக்கு 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை காங்கிரஸ் கேட்டுள்ள நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடம்கூட காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. பல ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு கவுன்சிலர் இடம்கூட காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை.

இதனால் திமுக மீது காங்கிரஸ் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு திமுக உரிய இடங்களை ஒதுக்காதது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பாமக, அதிமுகவில் இணைந்து போட்டியிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஒன்றியத்துக்கு 1 ஒன்றிய கவுன்சிலர், மாவட்டத்துக்கு 1 மாவட்ட கவுன்சிலர் இடங்களை கேட்டுள்ளன. முஸ்லிம் லீக், மமக ஆகியவைதிருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் இடங்களை கேட்டுள்ளன.

கேட்ட இடங்களில் 10-ல் ஒன்றுகூட கிடைக்காததால் மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும்அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x