ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல்: கைதான சென்னை தம்பதிக்கு தலிபான்களுடன் தொடர்பா என தீவிர விசாரணை

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல்: கைதான சென்னை தம்பதிக்கு தலிபான்களுடன் தொடர்பா என தீவிர விசாரணை
Updated on
1 min read

குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதாகியுள்ள சென்னை தம்பதிக்கு ஆப்கன் தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தமிழக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் ஈரானின் பண்டார்அப்பாஸ் துறைமுகத்தில் இருந்துகுஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, அதில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம்கோடி ஆகும்.

ஹெராயின் போதைப் பொருள்,ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான்வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கன்டெனர்கள் குஜராத் துறைமுகத்தில் இருந்துலாரிகள் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட இருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெராயின் இருந்த கன்டெய்னர்களை ஈரானில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஆஷிடிரேடர்ஸ் என்ற ஷிப்பிங் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. விஜயவாடாவை சேர்ந்த தம்பதியரான சுதாகர் - வைசாலிதான் அதன் உரிமையாளர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் வசிக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கொளப்பாக்கம் வீட்டில் இருந்து சுதாகர், வைசாலியை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து குஜராத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தம்பதியர் குறித்து தமிழக கியூ பிரிவு போலீஸார், மாநகர போலீஸார், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்கனில் இருந்து ஹெராயின் வந்துள்ளதால், தம்பதிக்கு தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்றகோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சென்னை ஈக்காட்டுதாங்கலிலும் ஆஷி டிரேடர்ஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த சென்னை, கோவையில் உள்ள பிற ஷிப்பிங் நிறுவனங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொளப்பாக்கத்தில் உள்ள வைசாலி தந்தையிடமும் விசாரணை நடந்துள்ளது.

இதற்கிடையில், சுதாகர் - வைசாலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கரோனா பொது முடக்கத்தால் பணி வாய்ப்பு இல்லாததால், ஏற்றுமதி - இறக்குமதி உரிமத்தை வேறொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளோம். எங்களுக்கும், ஹெராயின் கடத்தலுக்கும் தொடர்பு இல்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.

இது உண்மையா, அப்படியானால், ஹெராயின் கடத்தியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in