20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 1,000 செவிலியர்கள் உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற செவிலியர்கள்.படம்: க.ஸ்ரீபரத்
தமிழகம் முழுவதும் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற செவிலியர்கள்.படம்: க.ஸ்ரீபரத்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆர்.இந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

கரோனா பாதிப்பின்போதும் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல, தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதிலும் செவிலியர்களின் பணி முக்கியமானது.

பல மாதங்களாக காலியாக இருக்கும் செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவம், சுகாதாரப் பணிகள் தவிர, மற்ற பணிகளை செய்யுமாறு சுகாதார செவிலியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசு நிர்ணயம் செய்துள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.

முதல்வருக்கு வேண்டுகோள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.சகுந்தலா, புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலர் எம்.சாகிராபானு உள்ளிட்டோர் பேசினர். 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in