நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சசிகலாவின் பையனூர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சசிகலாவின் பையனூர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சசிகலாவுக்கு சொந்தமாக சென்னை அடுத்த பையனூர் அருகே ஓஎம்ஆர் சாலையில் 784 சதுர மீட்டர் பரப்பளவில் தென்னை மரங்கள் மற்றும் பழ மரங்கள் நிறைந்த தோட்டம் உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஓஎம்ஆர் சாலை விரிவாக்கத்துக்காக இந்த நிலத்தின் ஒரு பகுதியை கையப்படுத்துவதற்கான நடவடிக்கையை வட்டாட்சியர் மேற்கொண்டார். இதுதொடர்பாக உரிய இழப்பீடு வழங்குவதற்காக சசிகலாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த 2011-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா தரப்பில் வழக்கறிஞர் அசோகன் ஆஜராகி, ‘‘நெடுஞ்சாலைத் துறை சட்டத்துக்குட்பட்டு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கூட்டத்தில் மனுதாரர் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரினார்.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘சாலை விரிவாக்க திட்டத்துக்கு அந்த நிலம் அவசியமானது. மனுதாரருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக எழுத்துப்பூர்வ பணி முடிந்துவிட்டது.

வழக்கு நிலுவையில் இருப்பதால் நில ஆர்ஜிதம் மட்டும் முடியவில்லை. உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரான சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in