

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியான சூழல் முக்கியமானது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் மாநிலங்களில், பொருளாதார வளர்ச்சி இருக்காது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், கடந்த 10 நாள்களாக ஆங்காங்கே கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது.
வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் வசீம் அக்ரம் கொலை, திமுக முன்னாள் எம்.பி.யின் பேரன் கொலை, சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கணவன்-மனைவி எரித்துக் கொலை என்று தினமும் கொலைக் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுமட்டுமின்றி, காவல் துறையினரையே திரும்பித் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
எனவே, மாநிலத்தில் அமைதியான சூழலை உருவாக்கும் வகையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். அமைதியை சீர்குலைக்க முயல்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.