Published : 15 Mar 2016 04:10 PM
Last Updated : 15 Mar 2016 04:10 PM

டிராக்டர் கடனுக்காக விவசாயி தற்கொலை: நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு

அரியலூரில் டிராக்டர் கடனுக்காக விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் அருகேயுள்ள ஒரத்தூரைச் சேர்ந்த விவசாயி அழகர், பெரம்பலூரில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியிருந்தார். ரூ.5.10 லட்சம் தவணை கட்டிய நிலையில், மீதி தவணையை கேட்டு அவமானப்படுத்திய நிதி நிறுவனத்தினர், டிராட்டரை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில்குமார்கிரியிடம் புகார் மனுவும் அளித்தனர்.

அதன்பேரில் கயர்லாபாத் போலீஸார் விசாரணை நடத்தி, சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவன பெரம்பலூர் கிளை மேலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது, தற்கொலைக்குத் தூண்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் திட்டிவது, வாகனத்தைப் பறித்துச் சென்றது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அரசியல் கட்சியினர் ஆறுதல்

இந்நிலையில், பாமக, தமாகா, பாஜக கட்சிப் பிரமுகர்கள் ஒரத்தூரில் விவசாயி அழகர் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை ஆட்சியாளர்கள் புறக்கணித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, கடனில் மூழ்கி தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,434 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அழகர் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் அச்சுறுத்துவோரிடமிருந்து விவசாயிகளை மீட்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அழகர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது, “விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை ஆட்சியாளர்கள் உணர்ந்து, உரிய சலுகைகளை வழங்குவது அவசியம். தனியார் நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை கடன் வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். தமாகா சார்பில் அழகர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். தமாகா விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் உடனிருந்தார். இதேபோல, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, அழகர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, அழகர் குடும்பத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x