Published : 13 Mar 2016 09:28 AM
Last Updated : 13 Mar 2016 09:28 AM

6 முனை போட்டி எந்தக் கட்சிக்கு சாதகம்? - மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு

தனித்து போட்டியிடுவது என்ற தேமுதிகவின் முடிவால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அவ்வாறு 6 முனை போட்டி ஏற்பட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்? வாக்குகள் பிரிவது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கணிப்பு:

ஞாநி (மூத்த பத்திரிகையாளர்)

ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது தேர்தலுக் குத் தேர்தல் மாறக் கூடியது. தேமுதிகவின் பலம் 5 சதவீதத்திலிருந்து 2 ஆக குறையலாம். அல்லது 12 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். எனவே, 6 முனை போட்டி ஏற்பட்டால் யாருக்குச் சாதகம் என்பதை எளிதில் கணிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடும்போது ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரிந்து விடும். தனித்து 3, 4 சதவீதம் வாக்குகள் பெறும் கட்சிகளுக்கு ஒரு இடங்கள்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும். பல முனைப் போட்டி என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

மாலன் (மூத்த பத்திரிகையாளர்)

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்த நிலை திமுகவுக்கு இப்போது மீண்டும் வந்துள்ளது. திமுகவுடன் அன்றைக்கு பாஜகவும் சாதிக் கட்சிகளும் இருந்தன. அன்றைக்கு பாஜக இருந்த இடத்தில் இன்றைக்கு காங்கிரஸ் உள்ளது. 6 முனைப் போட்டி என்பது திமுகவுக்குத்தான் பிரச்சினையை ஏற்படுத்தும். ஏனென்றால், அதிமுகவுக்கான வாக்கு வங்கி அப்படியே தான் இருக்கும். ஆனால், தேமுதிக தனித்து நிற்பதால், திமுகவுக்கு வாக்களிக்க நினைத்திருந்த நடுநிலையாளர்கள் தேமுதிக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. அதிமுக, திமுக என இரு கட்சிகள் மீதும் இப்போது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதிமுகவை விமர்சித்து பேசுவதோடு, தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் திமுக உள்ளது. தேமுதிக, இந்த தேர்தலை குறிவைத்து மட்டும் செயல்படவில்லை. எதிர்காலத்தில் வலிமையான சக்தியாக உருவெடுக்கவே, இத்தகைய முடிவை அது எடுத்துள்ளது என்று நினைக்கிறேன்.

ஆர்.விஜய்சங்கர் (ஆசிரியர் ஃபிரன்ட்லைன்)

6 முனை போட்டி என்று இப்போதே கூறுவது சரியானது அல்ல என்று நினைக்கிறேன். தனது தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என்று தேமுதிக கூறியுள்ளது. ம.ந.கூட்டணி அங்கு செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. தேமுதிகவின் இப் போதைய அறிவிப்பு திமுகவுக்குத்தான் பாதகமாக அமையும். வெள்ளப் பிரச்சினை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ளது. இது தவிர அதிமுக மீது மற்ற இடங்களில் பெரிய அதிருப்தியில்லை. தேமுதிக தனித்து நிற்பதால், மாற்றத்தை விரும்புகிற நடுநிலையாளர்களின் வாக்கு சிதறும். இதனால் பாமக, ம.ந.கூட்டணியின் வாக்கு வங்கி சரிய வாய்ப்புள்ளது. தேமுதிகவை இதுவரை விமர்சிக்காத திமுக, இனி விமர்சிக்க ஆரம்பித்தால் அது அவர்களுக்கு சங்கடத்தையும், வீண் விமர்சனங்களையும் ஏற்படுத்தும். இது அவர்களுக்கு எதிராக அமையும். பாமகவுக்கு வட மாவட்டங்களில் உள்ள வாக்கு வங்கியும் சிதறக்கூடும்.

ஜென்ராம் (மூத்த பத்திரிகையாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி)

ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிடும் போது விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைக்கும். வெறும் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 6 முனைப் போட்டி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றே தோன்றும். ஆனால், கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களுக்கே மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் எனக் கூற முடியாது. எனவே, முடிவுகள் மாறவும் வாய்ப்புண்டு. அதிக வாக்கு சதவீதத்தை பெற்றாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை பல கட்சிகளுக்கு ஏற்படும். இதனால் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும். இது தேர்தல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும்.

ஆர்.பகவான் சிங் (மூத்த பத்திரிகையாளர்):

தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவுக்கு தான் சாதகமாக அமையும். திமுக தேமுதிக கூட்டணி அமைந்திருந்தால், தேமுதிகவுக்கு உள்ள 4 முதல் 5 சதவீதம் வரையிலான வாக்கு வங்கி திமுகவுக்கு கிடைத்து வெற்றி வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால், இப்போது தேமுதிக தனித்து நிற்பதால், அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும். இதனால் திமுகவுக்கு நன்மை கிடையாது. வெற்றி பெறுகிற கட்சி எது என்பதை மக்கள் மனதளவில் வைத்திருப்பார்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்காத வாக்காளர்கள், இறுதி நேரத்தில் அந்த வெற்றி பெறும் கட்சிக்கே வாக்களிப்பர். எனவே, இது அதிமுகவுக்கு சாதகமாக அமையும். ஆனால், ம.ந.கூட்டணி மற்றும் பாஜகவுக்குமான கதவை தேமுதிக திறந்தே வைத்துள்ளது. எனவே, பொறுத்திருந்துதான் எதையும் சொல்ல முடியும்.

ஆர். மணி (மூத்த பத்திரிகையாளர்)

இயற்கையாகவே திமுகவைவிட அதிமுகவுக்கு 4 சதவீத வாக்குகள் அதிகம். தேமுதிக வந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற மனநிலையை தனது கட்சியினரிடமே திமுக விதைத்து விட்டது. இதற்கு மாறாக தனித்துப் போட்டியிடுவது என தேமுதிக முடிவெடுத்துள்ளது. இது திமுகவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். 6 முனை போட்டியால் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற பேச்சு வலுப்பெறும். 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் வெற்றி பெறவாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலை கொண்டவர்கள். எனவே, பலமுனை போட்டி அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும். விஜயகாந்தை பிரகாஷ் ஜவடேகர் சந்தித்த அடுத்த கணமே, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என திமுக அறிவித்திருக்க வேண்டும். மாறாக அந்த வாய்ப்பை தேமுதிகவுக்கு கொடுத்துவிட்டதால் உளவியல் ரீதியாக திமுக தோல்வி அடைந்துவிட்டது. இதனை சரிசெய்ய திமுக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகளை கணிக்க முடியும்.

அ.குமரேசன் (பொறுப்பாசிரியர், தீக்கதிர்)

ஆளும் அதிமுக மீதும், இதற்கு முன்பு ஆண்ட திமுக மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவின் மதவாதத்தையும், பாமகவின் ஜாதியவாதத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்படாத தேமுதிக தனது தனித்தன்மையை வெளிப்படுத்துமா? அல்லது தனிமைப்பட்டு போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக, திமுக பெரிய கட்சிகளாக இருக்கலாம். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக, முதல் முறையாக மக்கள் நலக் கூட்டணி என்ற கொள்கை கூட்டணி உருவாகியுள்ளது. எனவே, 6 முனைப்போட்டி மக்கள் நலக் கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஏ.சுப்ரமணி (மூத்த பத்திரிகையாளர்)

தேமுதிகவின் இந்த முடிவு திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால், திமுக தொண்டர்கள் பலரும் தேமுதிக கூட்டணி நிச்சயம் என்று நம்பினர். தேமுதிகவினரும் திமுக கூட்டணி உறுதி என்று நம்பினர். ஆனால், இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த அரசாங்கம் மாற வேண்டும் என்றும், மொத்தமாகவே திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று வேண்டும் என்றும் 2 வகையாக உள்ளனர். ஆனால், அவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜயகாந்த் வெல்ல முடியும். ம.ந.கூட்டணியை வழிநடத்தினால் கூட அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனென்றால், இடதுசாரிகள், மதிமுக, விசிக, தேமுதிகவின் மொத்த வாக்கு வங்கியைச் சேர்த்தாலும், திமுக, அதிமுகவுக்கு நிகராக முடியாது.

லட்சுமி சுப்பிரமணியன் (மூத்த பத்திரிகையாளர்)

6 முனை போட்டி உறுதியானால் அது அதிமுகவுக்கே சாதகமாகவே இருக்கும். தமிழக வாக்காளர்கள் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பதற்காகவே வாக்களிக்கக் கூடியவர்கள். வெள்ள பாதிப்புகள் போன்ற காரணங்களால் அதிமுக அரசு மீது மக்களுக்கு சிறிய கோபம் இருப்பது உண்மைதான். ஆனால், அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை இருப்பதாக தெரியவில்லை. எனவே, அதிமுக வேண்டாம் என வாக்களிக்க வாய்ப்புகள் இல்லை. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் வலிமையான தாக இல்லை. எனவே, பலமுனை போட்டி என்பது ஆளும் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x