

நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ. தனியாக பைக்கில் பயணம் செய்து, தற்கொலைகளுக்கு எதிராக நேர்மறை எண்ணங்களை இளைஞர்களிடம் விதைத்து வரும் ஹைதராபாதைச் சேர்ந்த பெண் தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று மதுரை வந்தார்.
ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவன பயிற்சியாளர் சானா இக்பால்(27). இவர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வுப் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ. பயணம் செல்ல தீர்மானித்துள்ள அவர் கடந்த ஆண்டு நவ. 23-ம் தேதி கோவாவில் இருந்து, தனது இருசக்கர வாகனத்தில் பயணத்தை தொடங்கினார்.
இதுவரை 18 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்துள்ள அவர் நேற்று மதுரை வந்தார். திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். தற்கொலை என்பது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு அல்ல என்ற தலைப்பில் பேசிய சானா இக்பால், எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல. நமது குறைகளை நேர்மறை சிந்தனைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருக்க வேண்டும் என்றார்.