Last Updated : 23 Sep, 2021 08:40 PM

 

Published : 23 Sep 2021 08:40 PM
Last Updated : 23 Sep 2021 08:40 PM

புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் கடந்தும் பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் அவதி

புதுச்சேரி  

புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்களைக் கடந்தும் பாடபுத்தகங்கள் வழங்கப்படாத நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அவதியுற்று வருகி்னறனர். அதே நேரத்தில் அவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே ஜூலை 16-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

அதன்பிறகு கரோனா தொற்று குறையாததால் பள்ளி, கல்லூரி திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததால் செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும், அதன்படி காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். 9 மற்றும் 11-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, 12-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு முழுநேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டு, மதிய உணவும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 வாரங்களை கடந்த நிலையிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக பழைய புத்தகங்களையும், ஜெராக்ஸ் பிரதிகளையும் வைத்து மாணவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, அவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது: ‘‘புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் ஆக உள்ள நிலையில் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டும் பெரும்பாலான பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் புத்தகங்கள் வாங்கி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பயில முடியாமலும், பொதுத் தேர்வுக்கு தயாராக முடியாமலும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் மாணவர் சிறப்பு பேருந்தும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கிராமப்பகுதிகளில் இருந்து நகரப்பகுதிக்கு வரும் மாணவர்கள் இலவச பேருந்து இல்லாததால் பள்ளிக்கு வந்து செல்வதும் சிரமமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணமும் உயர்ந்துவிட்டது.

இதனால் கிராமப்பகுதிகளில் இருந்து நகரப்பகுதிக்கு வரும் மாணவர்கள் ரூ.40 முதல் 80 வரை நாள் ஒன்றுக்கு செலவிட வேண்டியதாக இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகமும் இல்லை. இதனால் பசியுடன் வீடு திரும்பும் நிலையே தொடர்கிறது. ஆசிரியர்களும் பெயருக்கென்று பள்ளிக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் மதிய உணவு வழங்கவும், சிறப்பு பேருந்துகள் இயக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் இருந்து தான் புதுச்சேரிக்கு பாடநூல் வர வேண்டும். தற்போது 50 சதவீதம் பாடநூல்தான் வந்துள்ளது. அவற்றை நாளை முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம். மீதியுள்ள 50 சதவீத நூல்கள் விரைவில் வரவுள்ளது.

மாணவர் சிறப்பு பேருந்துக்காக 5 ஆண்டுகள் போடப்பட்ட டென்டர் முடிந்துவிட்டது. இதனால் புதிதாக டென்டர் போட அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பேருந்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போதைய சூழலில் இருக்கிற பேருந்துகள் போதாது.

எனவே, சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும். கரோனா தொற்று காரணமாக மதிய உணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை உயர்ந்து, தொற்று பாதிப்பு குறைந்த பிறகு மதிய உணவு வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரியில் அட்சயப்பாத்திரம் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் மூலமும், காரைக்கால், மாஹே, ஏனாமில் கல்வித்துறை மூலமும் அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.’’என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x