பெருங்குடல் புற்றுநோயால் பாதிப்பு: ரோபோ அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கப்பதக்கம் வென்ற 28 வயது மருத்துவர் 

பெருங்குடல் புற்றுநோயால் பாதிப்பு: ரோபோ அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கப்பதக்கம் வென்ற 28 வயது மருத்துவர் 
Updated on
2 min read

28 வயதான முதுகலை மருத்துவப் பட்டதாரியான டாக்டர் ஜேடி, பெருங்குடல் ரோபோ அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, தனது முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம் [Apollo Institute of Colorectal Surgery, Chennai] சார்பில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிகிச்சை மையத்தின் பெருங்குடல் ரோபோ அறுவை சிகிச்சை நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகையில், “டாக்டர் ஜேடிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது 24-வது வயதிலேயே, (2017-ல்) லோ ரெக்டல் கேன்சர் என்னும் பெருங்குடல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் தனது முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தார். தான் எதிர்பார்த்திருந்த மருத்துவக் கனவு அவ்வளவுதான் அத்தோடு முடியப் போகிறது என அவர் கருதினார்.

ஏனெனில் பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை என்பது நோயாளிகளின் பெருங்குடலைக் கிழித்து மேற்கொள்ள வேண்டிய சிக்கலான சிகிச்சை. பழைய நடைமுறையில், வேண்டாத கழிவுகளை நோயாளியின் உடலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள செயற்கையான பையில் ஒரு குழாய் மூலம் கொண்டுசென்று அகற்ற வேண்டும்.

ஆனால், அப்போலோவில் ரோபோ உதவியுடனான பெருங்குடல் அறுவை சிகிச்சை மூலம், பெருங்குடலில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டு பெருங்குடல் பை மலக்குடலுடன் இணைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் நோயிலிருந்து அவர் மீண்டதுடன், படிப்பை மிகச் சிறப்பாக முடித்து, தங்கப் பதக்கத்தையும் பெற்றார். ரோபோ உதவியுடனான அறுவை சிகிச்சையால் குறைவான ரத்த இழப்புடன், விரைவாக உடல்நலம் தேறினார். ரோபோ அறுவை சிகிச்சையின் மூலம் பெருங்குடலைக் கீறி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையும் தவிர்க்கப்பட்டு, நோயாளிகள் இயல்பான வாழ்க்கையைத் தொடரலாம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறுகையில், "உலக வங்கி அடுத்த பத்தாண்டுகளில் தொற்றா நோய்களிலிருந்து தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நாடுகள் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய நெருக்கடி குறித்து வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட பெருங்குடல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளது. இதனால் அப்போலோவில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவ குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில், "அப்போலோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம் நோயாளிகளுக்கு உலகில் கிடைக்கும் மிகச் சிறந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதால், லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் அஃபுளோரிடாவில் செயல்பட்டு வரும் கிளிவ்லேண்ட் மருத்துவ மையம் ஆகியவற்றுடன் அப்போலோ நிர்வாகம் இணைந்து மருத்துவச் செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் 20 முதல் 40 வயது வரையிலானவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2018 குளோபோகேன் (GLOBOCAN 2018) தரவரிசையின்படி பெருங்குடல் புற்றுநோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 27,605 புதிய நோயாளிகள் உருவாவதாகவும், 19,548 பேர் மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுகாதாரமற்ற வாழ்க்கை முறை முக்கியக் காரணியாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in