Published : 23 Sep 2021 15:13 pm

Updated : 23 Sep 2021 15:13 pm

 

Published : 23 Sep 2021 03:13 PM
Last Updated : 23 Sep 2021 03:13 PM

தமிழகத்தில் 10 நாட்களில் 15-க்கும் மேற்பட்ட கொலைகள்; சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌: ஓபிஎஸ் வலியுறுத்தல்

aiadmk-coordinator-s-statement-on-law-and-order

சென்னை

தமிழகத்தில் 10 நாட்களில் ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


''ஒரு மாநிலம்‌ வளர்ச்சி‌ பெற வேண்டுமெனில்‌, அந்த மாநிலத்தின்‌ மக்கள்‌ வளம்‌ பெற வேண்டுமெனில்‌, மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைய வேண்டும்‌. மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, சிறந்த ஆரோக்கியம்‌ எனப் பல்வேறு காரணிகள்‌ இருந்தாலும்‌, இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணியாக விளங்குவது அமைதியான சூழல்‌.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்‌, ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌.

மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக் குந்தகம்‌ ஏற்படும்‌ மாநிலங்களில்‌ பொருளாதார வளர்ச்சிக்கு இடம்‌ இருக்காது. ஏனெனில்‌, அமைதி குன்றிய மாநிலங்களில்‌ தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும்‌, புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும்‌ தொழில்‌முனைவோர்கள்‌ முன்வரமாட்டார்கள்‌ என்பதோடு, அந்த மாநிலத்தில்‌ உள்ள மக்களும்‌ தங்களைத்‌ காத்துக்‌ கொள்வதிலேயே நேரத்தைச் செலவிடவேண்டிய சூழல்‌ ஏற்படுமே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ நடவடிக்கைகளில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள இயலாது.

தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ ஒருபுறம்‌ எடுக்கப்பட்டு வந்தாலும்‌, கரோனா தொற்று நோய்‌ பாதிப்பு ஓரளவு கட்டுக்குள்‌ இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில்‌, கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை; திமுக முன்னாள்‌ மாநிலங்களவை உறுப்பினரின்‌ பேரன்‌ வெட்டிக் கொலை; சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை; நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம்‌, தப்பூர்‌ கோவிந்தாங்கல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ரங்கநாதன்‌ கட்டையால்‌ தாக்கிக் கொலை; விழுப்புரம்‌ மாவட்டம்‌, காரணை கிராமத்தைச்‌ சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச்‌ சேர்ந்த பாஜக‌ பிரமுகர் முத்துபாண்டி வெட்டிக்‌ கொலை; திருவண்ணாமலை மாவட்டம்‌, வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சீலேப்பள்ளியைச்‌ சேர்ந்த விவசாயி வெங்கடப்பன்‌ அரிவாளால்‌ வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, குப்பங்குளத்தைச்‌ சேர்ந்த காந்திமதி வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்‌; தேவகோட்டை ஒன்றிய பாஜக பொதுச்‌ செயலாளர்‌ கதிரவன்‌ வெட்டிக்‌ கொலை என எண்ணற்ற கொலைகள்‌ வரிசையில்‌, நேற்று திண்டுக்கல்‌, இ.பி. காலனியைச்‌ சேர்ந்த நிர்மலா பட்டப்பகலில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூரச்‌ சம்பவங்களுக்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இது மட்டுமல்லாமல்‌, சட்டம்‌- ஒழுங்கை நிலை நாட்டும்‌ பணியில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கும்‌ காவல்‌துறையினரையே திருப்பித்‌ தாக்கும்‌ சம்பவங்களும்‌ ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்‌ தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம்‌ பாதிக்கும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகம்‌ இல்லை.

எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும்‌ அமைதியான சூழலை உருவாக்கிடும்‌ வகையில்‌, முதல்வர்‌ சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌ செலுத்தி, சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்கவும்‌, கொலைக்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோரை சட்டத்தின் முன்‌ நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்‌ தரவும்‌ அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!பொருளாதார வளர்ச்சிஓபிஎஸ் வேதனைAIADMK CoordinatorLaw and orderசட்டம்‌- ஒழுங்குஓ.பன்னீர்செல்வம்‌அதிமுக ஒருங்கிணைப்பாளர்ADMKவசீம்‌ அக்ரம்‌திமுக ஆட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x