

புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.100 கோடியும் அளிக்க உள்ளது என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை, பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் தனியாக உள்ளது. தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட ரங்கசாமி தலைமையிலான அரசு முயன்று வருகிறது.
இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சுமார் ரூ.320 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு, நாடாளுமன்ற நிதி பெற புதுச்சேரி அரசு முயன்று வருகிறது. ஏற்கெனவே புதுவை பேரவைத் தலைவர் செல்வம், நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவிடம், சட்டப்பேரவை கட்ட நிதி கோரியிருந்தார்.
அதையடுத்து டெல்லி சென்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, முதல்வர் ரங்கசாமி அளித்த நிதியுதவி கோரும் கடிதத்தை அளித்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், கடிதம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறையானது புதுச்சேரிக்குப் புதிய சட்டப்பேரவை கட்ட அனுமதி தந்து கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட வரைபடத்துடன் விண்ணப்பித்தோம். மத்திய அமைச்சர்களைச் சந்தித்து விளக்கி நிதி கோரினர். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறையில் இருந்து சட்டப்பேரவை கட்ட அனுமதிக் கடிதம் வந்துள்ளது. அதில் நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடியும், அடுத்த நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளனர். இப்பணிகள் தொடர்பாக முழு விவரத்தையும் அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.