

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதியின் மனு இன்று ஏற்கப்பட்டது. சுயேச்சைகளின் 5 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதுவை மாநிலங்களவைத் தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. பாஜக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தவிர சுயேச்சைகளாக பத்மராஜன், ஸ்ரீராமச்சந்திரன், ஆனந்த், ஜார்ஜ் அகஸ்டின் உள்ளிட்டோர் 5 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். பாஜக வேட்பாளர் செல்வகணபதி மூன்று மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். மொத்தமாக 8 மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தலைமையில் சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். பாஜக வேட்பாளர் செல்வகணபதி, எம்எல்ஏவும் வக்கீலுமான அசோக்பாபு உடன் பங்கேற்றார்.
அப்போது, சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தோரின் 5 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்வோர் 10 எம்எல்ஏக்கள் பரிந்துரையுடன் மனுத்தாக்கல் செய்யாததால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் செல்வகணபதியின் மனு ஏற்கப்பட்டது.
இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி கூறுகையில், ''சுயேச்சைகள் தாக்கல் செய்த ஐந்து மனுக்களிலும் எம்எல்ஏக்கள் பரிந்துரை இல்லாததால் அவை ஏற்கப்படவில்லை. பாஜக வேட்பாளர் செல்வகணபதி தாக்கல் செய்த 3 மனுக்களும் ஏற்கப்பட்டன. வரும் 27-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற இறுதி நாள். அன்றைய தினம் 3 மணிக்குப் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் தரப்படும். அவர் தனது பதவியை டெல்லியில் ஏற்பார்" என்று குறிப்பிட்டார்.