Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

இ. சுந்தரமூர்த்தி

சென்னை

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (79) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்கிறார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக இருப்பவர்தான் இந்நிறுவனத்தின் தலைவர் ஆவார். தற்போது அதன் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்

இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ளது. தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்கிறார்.

துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டு பணியாற்றியுள்ள இவர், தமிழ் இலக்கியத் துறை தலைவர், பதிப்புத்துறை இயக்குநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2001 முதல் 2004 வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் 2008 முதல் 2014 வரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார்.

இதழியல் வளர்ச்சி வரலாறு, திருக்குறள் ஆய்வியல், திருக்குறள் வாழ்க்கை விளக்கம் உட்பட 65 நூல்களை எழுதியுள்ளார். 260 கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். தமிழக அரசின் திருக்குறள் விருதுஉட்பட 20-க்கும் மேற்பட்ட விருது களைப் பெற்றுள்ளார்.

புதிய பொறுப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றநல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த மத்திய அரசுக்கு நன்றி. செம்மொழி நிறுவனத்தில் இளம் ஆய்வறிஞர்களை உருவாக்க பயிற்சி வகுப்புகள், இலக்கண பயிலரங்குகள் நடத்தப்படும். திருக்குறளை இன்னும் பல உலகமொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அகழ்வாராய்ச்சி தகவல்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் மூலம் தமிழின்தொன்மையையும், பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் கொண்டுசெல்ல செம்மொழி தமிழாய்வு நிறுவனம் துணை நிற்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x