தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்: குடியரசு தலைவர், உள்துறை அமைச்சரை சந்திக்கிறார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்: குடியரசு தலைவர், உள்துறை அமைச்சரை சந்திக்கிறார்
Updated on
1 min read

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆர்.என்.ரவி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநராகப் பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், கடலோரப் பாதுகாப்பு பற்றி பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

2 நாட்கள் தங்குகிறார்

இந்நிலையில், பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை டெல்லி செல்கிறார். 2 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in