

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ளஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு அக்.6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
மொத்தம் உள்ள 27 ஆயிரத்து 792 பதவிகளுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். அன்று மாலையே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போதே வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பணிகளும் நடைபெற உள்ளன.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
வரும் 26-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைய உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல்முன்னேற்பாடு குறித்து, மாவட்டஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் நேற்றுநடைபெற்றது. அதில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், வேட்புமனு தாக்கல் முதல், தேர்தல் முடிவு அறிவித்தல் வரையிலான புள்ளிவிவரங்களை மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், வேட்புமனு தாக்கல் செய்யப்படாத இடங்கள், ஒரு வேட்புமனு மட்டும் பெறப்பட்ட இடங்கள், உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்படுவதாக பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் கரோனாதடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், பறக்கும் படைகள் அமைத்தல், வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அது தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசித்தல், வாக்குஎண்ணும் மையங்களை அமைத்தல், அவற்றில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல், வாக்குச்சீட்டு பதிவிறக்கம் செய்து அச்சடித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டபணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், ஜனநாயகமுறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் களுக்கு ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தினார்.
இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்.12-ம் தேதி நடைபெறுகிறது. வெற்றி பெற்றோர் பதவியேற்பு நிகழ்ச்சி 20-ம் தேதியும், மறைமுகத் தேர்தல் 22-ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது.