Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், 3-வது அலை குறித்த அச்ச உணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

டெங்கு பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.உருமாறிய வகை 2 டெங்குதற்போது நாட்டில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துடையது என்றும், இந்த டெங்கு பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில்பரவி வருவதாகவும் ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் தண்ணீரில் உருவாகும் ஏடிஎஸ் கொசுகள் மூலம் பரவுகிறது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,400 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் இன்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,600-ஐ கடந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை அடுத்த மாதம்தொடங்க இருக்கிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம்.

எனவே முதல்வர், இதில் தனிக்கவனம் செலுத்தி டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளவும் தக்க அறிவுரைகளை தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x