

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு அதிகமாக வழங்கப்பட்ட நகைக்கடன்களை விரைவாக வசூலிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட் டுள்ளார்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, நகைக் கடன் தள்ளுபடிக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பல மாவட்டங்களில், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் நேற்று அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், "கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேல் வழங்கப்பட்ட நகைக் கடன் நிலுவை குறித்த விவரங்கள் பெறப்பட்டன.குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஆதார் எண் அடிப்படையில் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும், வெவ்வேறு மாவட்டங்களில் நகைக் கடன் பெற்றுள்ளனர்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
எனவே, 40 கிராமுக்கு (5 பவுன்)மேல் நகைக் கடன் பெற்றவர்களின் கடன் தொகையை விரைவாக வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தவணை தவறி இருந்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, தொகையை வசூலிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.